எழும்பூர் - தாம்பரம் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் ஓடிய ஒரு ரயிலில்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு உன்னைப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்தில் என் இதயத்தின் கதவுகளை நெட்டித் தள்ளி, உள்ளே நுழைந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டாய்.
நீ கல்லூரி ஒன்றில் படிக்கப் போய்க்கொண்டு இருக்கிறாய் என்பதைத் தவிர, உன்னைப் பற்றி வேறெதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை மூன்று நான்கு மாதங்கள் ஆனபின்னும்.
என்னைப் போலவே, உனக்கும் என்னைப் பிடித்திருக்கிறது என்று முழுவதும் நான் நம்பிய ஒரு நாளில்.... ஆசையோடு நான் உன்னிடம் பேச வந்தேன். அலட்சியமாக விலகிப் போனாய் நீ.
ஏன் அப்படிப் போனாய் என்று நான் யோசித்துக்கொண்டு இருந்த நாட்களிலேயே உன் கல்லூரிக் காலம் முடிந்து, நீ ரயிலில் வருவதும் நின்று விட்டது.
நீ வருவதில்லை என்றாலும் உன்னோடு பயணித்த ஒவ்வொரு பயணத்தையும் இந்த ரயில்கள் எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தன தினம் தினம்.
அத்தகைய ரயிலைத்தான்... இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிற ஒரு சிறப்பு ரயிலோடு நிருத்தப் போகிறார்கள் என்பதை அறிந்தபோது... இந்த ரயிவே அதிகாரிகளை எல்லாம் வரிசையாக நிற்கவைத்து, கருங்கற்களை அள்ளி அவர்கள் தலையில் கொட்ட வேண்டும் போலிருந்தது எனக்கு.
மாலைகள் சூட்டிய அந்தக் கடைசி ரயிலும் வந்து நின்றது. நானும் ஏறினேன். வண்டி நகர்கையில் யாரோ ஓடிவந்து ஏற... அய்யோ... நீ! ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தோம். பேசத் துடித்தன உதடுகள். ஆனால், என்ன பேசுவது?
ஓடும் ரயிலின் சத்ததை மீறிய மௌனத்தோடு நகர்ந்த பயணம் தாம்பரத்தில் முடிந்தபோது அனைவரும் இறங்கிப் போனார்கள். நீ மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாய். உன் அருகில் வந்தேன். எழுந்து நின்றாய்.
'ரயில் பார்க்க வந்தீங்களா?' என்றேன்.
'இல்லை... உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்' என்றாய் கலங்கக் காத்திருக்கும் கண்களோடு.
தாங்க முடியவில்லை என்னால், 'அப்படியே... அப்படியே கண்களைச் சுற்றி அந்த ரயிலைப் பார்த்தேன். அதில் ஒரு மூலையில் நான் எப்போதோ எழுதியிருந்த உன் பெயரும் என் பெயரும் நம்மைப் பார்த்தன.
தன் பயணத்தை முடித்துக்கொள்ளப்போகிற நேரத்தில் நம் பயணத்தைத் தொடங்கிவைத்த ரயிலைத் தட்டிக்கொடுத்தபடி இறங்கி... ' கொஞ்சம் தண்டவாளத்தில் நடக்கலாம் ' என்று உன்னை அழைத்துக்கொண்டு தண்டவாளத்தில் நடந்தேன்.
எங்களை இணைத்துவிட்டு, இன்னும் சற்று நேரத்தில் பிரியப் போகிற தண்டவாளங்களே... உங்களைக் காலம் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். எங்களுக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மீட்டர் கேஜ் ரயில்!
தபூ சங்கர்