Friday, November 16, 2007

இணை துருவங்கள்

மழை நாட்களில்
ஆவி பறக்கும்
இரு தேநீர் கோப்பைகளுடன்
உன்னருகே நான்...நிமிரவும் நேரமின்றி
கணிப்பொறியில்
கண்பதித்து நீ!

ரயில் பயணங்களில்
எதிர் இருக்கை மழலையின் சிரிப்பை
உன்னுடன் பகிரத்துடித்தபடி நான்..
செல்பேசி பண்பலையில்
இருவிழி மூடிமிதந்துகொண்டு நீ!

விடுமுறை மதியம்..
சதுரங்கப் பலகையின்
இரு முனைகளிலும்
காய் நகர்த்தியபடி நான்..
பட்டியலில் இல்லாசேனல் ஒன்றின்
மல்யுத்தம் பார்க்கும்
உற்சாகத்தில் நீ!

ஊடல் பொழுதுகளில்..
சப்தங்கள் அர்த்தமிழக்கும்
மௌனத் திரைக்குப் பின்னே
நான்......!
சஹாரவைத் தோற்கடிக்கும்
அக்னி வார்த்தைகளுடன் நீ......!

புத்தக கண்காட்சியில்..
இரு கை கொள்ளாமல்
கவிதைத் தொகுப்புகளுடன்
தவித்திருப்பேன் நான்..
கவனம் கலையாமல்
உலகப் பொருளாதாரம்
வாசித்துக்கொண்டிருப்பாய் நீ!

இப்படி
எத்தைனையோ தருணங்களில்
உன்னையும் அறியாமல்
என்னை உடைத்திருக்கிறாய்!
சில்லுகளை சேகரித்துக் கொண்டு
உன்னையே நெருங்குகிறேன் நான்
நமக்கிடையேயான இந்த
மாயத்திரையை அகற்ற
நான் போராடியே ஆக வேண்டும்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி!

சாய்ரா பானு

1 comment:

சில்வண்டு! said...

நொறுங்கிய இதய சில்லுகளை கைகளில் ஏந்தி குருதி வழிய அவள் எதிரே குற்றுயிராய் நிற்க.. அந்த சில்லில் தெரியும் தன் பிம்பத்தில் முகம் பார்த்து சிகை அலங்கரிக்கும் பெண் என்றால் அன்பரே! ஆயுதம் ஏந்துவதும் போராடுவதும் வீண்!

அன்பும்.. ஆயுதமும் அதற்கு தகுதியானோரிடத்து ப்ரயோகிக்கப்படும் போது தான் பலன் கிட்டும்! ஆகவே... முதலில் தகுதி அறிக... அது இருப்பின் இயன்றவரையில் பிரயோகிக்க...!

கவிதை அருமை!